
பொன்னேரி:
மீஞ்சூர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீஞ்சூர் காலனி அண்ணாதெருவைச் சேர்ந்த லட்சுமணன்(27) என்பதும், வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 10-ந் தேதி இரவு லட்சுமணன் தன்னுடன் வேலை செய்யும் நண்பரின் மகள் திருமணத்திற்காக மீஞ்சூர் பாலகோட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.
லட்சுமணனுக்கு வருகிற 22-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் தலையில் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்துள்ளதால் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசினார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.