search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது - ஈவிகேஎஸ் இளங்கோவன்
    X

    பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

    பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது, என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். #EVKSElangovan #PriyankaGandhi #PMModi

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியின்போது கிராமப்புற விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. மோடி ஆட்சியில் அந்த திட்டத்தை சரிவர அமல்படுத்துவதில்லை. வேலை செய்த விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு பலநாட்கள் சம்பளம் வழங்குவதுமில்லை.

    முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, தேர்தலை சந்தித்தபோது ஜவுளி தொழிலுக்கு விதிக்கப்பட்டு இருந்த சென்வாட் வரியை முற்றிலுமாக நீக்குவோம் என்றோம். நாங்கள் வெற்றி பெற்றவுடன், அந்த துறைக்கு நான் மத்திய மந்திரியாக இருந்தபோது முழுமையாக நீக்கினோம். அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி கூறி உள்ளார்.

     


    இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தியின் மறு உருவமாக அவரது பேத்தி பிரியங்கா காந்தி வந்துள்ளார். அவரது வருகையால் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது. பிரியங்கா காந்தி நிச்சயம் ஈரோடு வருவார். நீங்கள் வரவேற்க தயாராக வேண்டும்.

    ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு உங்கள் வாக்கினை செலுத்த வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல் வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். நல்லாட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #EVKSElangovan #PriyankaGandhi #PMModi

    Next Story
    ×