search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் வரவேற்றார்
    X

    கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் வரவேற்றார்

    சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #modi #modiincoimbatore
    கோவை:

    சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரெயில் நிலையங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

    இதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கோவை வந்து சேர்ந்த பிரதமர் மோடிக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்லும் மோடி,ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் அரசு விழா நடைபெறும் இடத்துக்கு சென்று மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். #modi #modiincoimbatore
    Next Story
    ×