search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் கூட்டணி பேச்சு தொடங்கி விட்டது- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    தமிழகத்தில் கூட்டணி பேச்சு தொடங்கி விட்டது- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு தொடங்கி விட்டது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    தென்தாமரைகுளம்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அகஸ்தீஸ்வரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் வருகிறார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் தமிழகத்தின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் பல வி‌ஷயங்கள் பற்றியும் பேசுகிறார். ஏற்கனவே மதுரையில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றது தமிழக மக்களுக்கு தங்களது எதிர்காலம் மீதும், பிரதமர் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    நாளை பிரதமர் வருவது நம்பிக்கையையும், புதிய தெம்பையும் மக்களுக்கு கொடுக்கும். கன்னியாகுமரிக்கும் அதன்பிறகு பிரதமர் வருகைதர உள்ளார். இங்கு அரசு நிகழ்ச்சியிலும், பாரதீய ஜனதா கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று பேசுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை முழுமை பெற்றபிறகுதான் அறிவிப்பு வரும். தேர்தல் கூட்டணி பேச்சை நோக்கி பயணம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் அமையும் பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி அமையுமா என்பது பற்றி அகில இந்திய தலைமை பேச்சுக்கு பிறகு தெரியவரும்.


    தம்பித்துரை பாரதீய ஜனதா பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருக்கும் எங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. அவர் சொல்லும் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் ஆகும். பாரதீய ஜனதா கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களில் வெற்றிபெறும்.

    கூட்டணி பற்றி கடைசி நேரம் வரை கணிக்க முடியாது என்று துரைமுருகன் கூறி உள்ளார். அவர் பழுத்த அரசியல்வாதி என்பதால் அவரது கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான். அதேசமயம் கூட்டணி இல்லாமல் தி.மு.க. தேர்தலை சந்திக்க முடியாது. ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் கூட்டணி அமைக்கிறது என்பது உலக மகா பொய்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவி ஏற்று உள்ளதால் ப.சிதம்பரத்தின் ‘கை’ ஓங்கி உள்ளதா? என்று கேட்கிறீர்கள். தமிழகத்தில் ‘கை’ ஓங்க முடியாது. 1969-க்கு பிறகு 44 சதவீதமாக இருந்த அந்த கட்சியின் ஓட்டு இன்று 4 சதவீதமாக குறைந்துவிட்டது. அவர்களது ‘கை’ ஓங்கவே முடியாது.

    தமிழக பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி வழங்கி இருப்பதும் பாராட்டத் தக்கது.

    ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்து உள்ளதால் அதற்கான பலன் பொதுமக்களுக்கு கிடைக்கும். வரி வசூல் மூலம் கிடைக்கும் பணம் வீடு, ரோடு, ரெயில் வசதி, இலவச கியாஸ் என்று பொது மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் நலனில் மத்திய அரசு அதிக அக்கரை கொண்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பேசும் மேடை அமைக்கும் பணியை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    Next Story
    ×