search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி மூலம் கடந்த 9 மாதங்களில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.31 ஆயிரம் கோடி
    X

    ஜிஎஸ்டி மூலம் கடந்த 9 மாதங்களில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.31 ஆயிரம் கோடி

    சரக்கு சேவை வரி மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு வருவாயாக 31 ஆயிரத்து 350.63 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. #GST #TNgovernment
    சென்னை:

    பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வெவ்வேறு வரி விகிதங்கள் இருந்து வந்தன. அதோடு, மாநில ஆட்சிக்கு நிலவும் நெருக்கடிக்கு ஏற்ப வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த மாறுபட்ட மாநில விற்பனை வரிகள், தேசிய அளவில் நடக்கும் வர்த்தகங்களுக்கு உகந்ததாக இல்லை.

    பின்னர் அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட அளவில் மதிப்பு கூட்டு வரி என்ற வாட் வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த வாட் வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான மசோதா, 2015-ம் ஆண்டு மே 6-ந் தேதி பாராளுமன்றத்தில் பெருமளவு எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

    அதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, இந்தியா முழுவதிலும் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைப் பற்றி ஆலோசிப்பதற்காகவும் வரி விதிப்பில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதை செயல்படுத்துவதற்காகவும் மாநில அளவில் உறுப்பினர்களைக் கொண்ட ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்பட்டது. டெல்லியில் 30-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. குழு கூட்டம் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தக் குழு கூட்டத்தில் மாநில அரசுகள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து, சில பொருட்களுக்கான வரி விதிப்பை மாற்றி வருகின்றன. ஆரம்பகட்டத்தில் விதிக்கப்பட்ட வரி விகிதம் தற்போது இல்லை என்பதால், ஜி.எஸ்.டி.க்கு முதலில் இருந்த எதிர்ப்பு குறைந்துள்ளது. இந்த வரி விதிப்பினால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருவாயை ஈட்டி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை, மத்திய அரசு அவ்வப்போது ஈடுகட்டி வருகிறது.



    இந்த நிதி ஆண்டின் தொடக்கமான கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதிவரை 9 மாதங்களில் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் மற்றும் இழப்பீடு கிடைத்துள்ளது என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ.3,161.57 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ரூ.2,864.29 கோடி, ஜூனில் ரூ.4,718.51 கோடி, ஜூலையில் ரூ.3,072 கோடி, ஆகஸ்டில் ரூ.3,593.15, செப்டம்பரில் ரூ.3,014.26, அக்டோபரில் ரூ.4,159.91, நவம்பரில் ரூ.3,116.53, டிசம்பரில் ரூ.3,650.42 என 9 மாதங்களில் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.31 ஆயிரத்து350.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும், அக்டோபரிலும் இழப்பீடாக ஒரு ரூபாயைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. செப்டம்பரில் ரூ.308 கோடி, நவம்பரில் ரூ.77 கோடி, டிசம்பரில் ரூ.1,470 கோடி என மொத்தம் ரூ.1,855 கோடியை தமிழக அரசுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது. #GST #TNgovernment

    Next Story
    ×