search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அருகே கிராமத்துக்குள் புகுந்து 2 ஆண் காட்டு யானைகள் அட்டகாசம்
    X

    ஊட்டி அருகே கிராமத்துக்குள் புகுந்து 2 ஆண் காட்டு யானைகள் அட்டகாசம்

    ஊட்டி அருகே 2 ஆண் காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து மலை காய்கறி பயிர்களை சேதப்படுத்தியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி முதல் வரலாறு காணாத கடும் உறைபனி பொழிவு காணப்படுகிறது.

    இதனை தொடர்ந்து வன பகுதியில் பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் கருகி உள்ளன. இதனால் தற்போது வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிறியூர், சிங்காரா வன பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

    இவ்வாறு இடம் பெயர்ந்து செல்லும் யானை கூட்டங்களில் 2 ஆண் யானைகள் ஊட்டி அருகே உள்ள தூனேரி, மரகல், நெல்லிக்கம்பை, தொரையட்டி ஆகிய கிராம பகுதிக்குள் கடந்த 5 நாட்களுக்கு முன் புகுந்தது.

    அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட் போன்ற பயிர்களை தின்று தேசப்படுத்தியது. சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை சேதம் செய்தது.

    யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 ஆண் யானைகளும் கோபம் அடைந்தது. அவைகள் பொதுமக்களை துரத்தியது. பின்னர் பட்டாசுகள் வெடித்து யானைகள் எப்பநாடு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

    யானைகளை வன பகுதிக்குள் விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டதால் அப் பகுதியை சுற்றி உள்ள தேயிலை விவசாயிகள் மற்றும் மலை காய்கறி விவசாயிகள் நேற்று தோட்ட வேலைக்கு செல்லவில்லை.

    Next Story
    ×