search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது - டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு
    X

    சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது - டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு

    இயற்கை பேரிடர்களை விட சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது என தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே பாப்பாக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். ஊர்வக்காவல்படை மண்டல தளபதி ஆனந்த் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தப்படி போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதை தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு முகாமில் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசியதாவது:-

    சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தான் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இறக்கின்றனர். அதில் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிந்து 4 சக்கர வாகனங்களை ஓட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×