search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் ரூ.100 முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம்
    X

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் ரூ.100 முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. #Plasticban
    சென்னை:

    தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மறுசுழற்சி மற்றும் மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களும் வீட்டில் இருந்தே பைகளை கொண்டு செல்கிறார்கள். என்றாலும் ஒரு சில இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

    பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து 1 மாதம் கடந்த நிலையில் தற்போது மாநகராட்சி கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி ரூ.100 முதல் ரூ.3 லட்சம் வரையில் 4 விதமான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் முதல் தடவை பிடிபட்டால் ரூ.1 லட்சமும், 2-வது தடவை பிடிபட்டால் ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். 4-வது தடவையாக தொடர்ந்து உத்தரவை மீறினால் தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.

    டீலர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு முதல் தடவை ரூ.25,000, 2-வது தடவை ரூ.50,000, 3-வது தடவை ரூ.1 லட்சம் என அபராதம் விதிக்கப்படும். 4-வது தடவையாக மீறினால் வியாபார நிறுவனத்தை மூடுதல் அல்லது வாகன பறிமுதல் செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மால்களுக்கு முதல் தடவை ரூ.10 ஆயிரம், 2-வது தடவை ரூ.15 ஆயிரம், 3-வது தடவை ரூ.25 ஆயிரம் எனவும், நடுத்தரம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முதல் தடவை ரூ.1,000, 2-வது தடவை ரூ.2 ஆயிரம், 3-வது தடவை ரூ.5 ஆயிரம் எனவும் தொடர்ந்து மீறினால் நிறுவனத்தை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறிய கடைகளுக்கு முறையே ரூ.100, ரூ.200, ரூ.300 என அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Plasticban
     
    Next Story
    ×