search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
    X

    சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

    சென்னைக்கு அருகில் ரூ. 2 ஆயிரம் கோடியில் மிக பிரமாண்டமாக உணவு பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    கோவை:

    கோவை வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்படத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    1957-ல் கோவை செங்காளி பாளையத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். விவசாயிகளின் பாசனத்துக்கு வழங்கப்பட்ட 16 மணி நேர மின்சாரம் 4 மணி நேரம் குறைக்கப்பட்டதை எதிர்த்து இவர் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக சங்கத்தை தொடங்கி விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தினார்.

    இவரின் போராட்டத்தின் பயனாக தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் உழவர் இயக்கங்கள் தொடங்கப்பட்டன.

    2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு கோவை வையம் பாளையத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என புரட்சித்தலைவி ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி ரூ. 1½ கோடி மதிப்பீட்டில் அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு விவசாயியான நான் அதை திறந்து வைத்து உள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    இந்த அரசு விவசாயிகளுக்காக செயல்பட்டு கொண்டு இருக்கிற அரசு. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டம் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதிக அளவில் உணவு தானிய உற்பத்தி செய்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதான கிரிஷ்டி கர்மன் விருதை தமிழகம் பெற்றுள்ளது.



    காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட புரட்சிதலைவி சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட நாள் என் வாழ்நாளில் பொன் நாள் என்று அறிவித்து விவசாயிகளை பெருமைப்படுத்தியவர் புரட்சித்தலைவி. அதே போல விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்த இந்த நாள் எனது வாழ்க்கையின் பொன் நாள். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பொறுத்தவரை ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாத இறுதிக்குள் நடைபெறும்.

    விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அவர்களுக்கு உரிய நீர் கிடைப்பதற்காக குடிமராமத்து திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் ஒரு சில பகுதிகள் விடுபட்டு இருந்தன. எம்.பி., எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று விடுப்பட்ட பகுதிகளான அன்னூர் மேற்கு, எஸ்.எஸ்.குளம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளையும் சேர்ப்பதற்காக ஆய்வில் உள்ளது.

    இதே போல சென்னைக்கு அருகில் ரூ. 2 ஆயிரம் கோடியில் மிக பிரமாண்டமாக உணவு பூங்கா அமைக்கப்படும். இதற்காக 300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. உணவு பூங்காவில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை குளிர்சாதன வசதி செய்து ஏற்றுமதி செய்ய இந்த பூங்கா விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன்படும்.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இரவு-பகல் பாராமல் உழைக்கும் ஒரு தொழிலாளி விவசாயி தான். விவசாயிகளையும், தொழிலாளிகளையும் பாதுகாக்கும் அரணாக இந்த அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami
    Next Story
    ×