search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்
    X

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்

    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காலிக்குடங்களுடன் திரண்டு வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கரூர் மாவட்டம் தென்னிலை மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கூனம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊர்தலைவர் பழனிசாமிகவுண்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த பெண் போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அதிலுள்ள 5 பேர் மட்டும், பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்க சென்றனர். அந்த மனுவில், எங்கள் ஊரியல் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவிரிக்குடிநீர் கடந்த 15 நாட்களாக வீடுகளுக்கும், தெருக்குழாயிலும் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. எங்கள் ஊரில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டதால், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலும் நீரை சேமித்து வைத்து பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு வினியோகிக்க முடியவில்லை. குடிநீர் தொட்டி யுடன் சேர்ந்த ஆழ்குழாய் கிணறு மற்றும் அடிபம்புகளும் பழுதாகி உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பலரும் விவசாய கிணறுகளை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை எங்கள் ஊரில் அமைத்து தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எங்கள் ஊரின் தொடக்க பள்ளி அருகே பொதுக்கிணறு சுற்றுசுவரின்றி உள்ளது. எனவே விபரீத சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அங்கு சுற்றுசுவர் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட சாமானிய மக்கள்நலக்கட்சியினர் கொடுத்த மனுவில், கரூரில் சாய ஆலைக்கழிவுகள் நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கலக்கப்படுகிறதா? என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் அருகேயுள்ள சணபிரட்டி, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், செட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளும் செயலலில் ஈடுபடுகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    கரூர் மாவட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டியக்கம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர்-மதுரை நெடுஞ்சாலை, திருச்சி பிரிவுரோடு, சுக்காலியூர் உள்ளிட்ட இடங்களில் சந்துக்கடைகள் வைத்து மதுவிற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபான பார்களின் செயல்பாடு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை விதிமுறைப்படி இயங்குகின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சியில் முறைப்படி கிராம சபை கூட்டம் நடத்துவதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தற்கு சிலர் மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்து இருந்தனர்.

    மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 
    Next Story
    ×