search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதிகளின் சாப்பாட்டுக்கு 50 சதவீதம் கூலி பிடித்தமா? - சென்னை ஐகோர்ட் அதிருப்தி
    X

    கைதிகளின் சாப்பாட்டுக்கு 50 சதவீதம் கூலி பிடித்தமா? - சென்னை ஐகோர்ட் அதிருப்தி

    தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியில் 50 சதவீதம் உணவு, உடைகளுக்காக பிடித்தம் செய்யப்படுவதற்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    மதுரை:

    தமிழகத்திலுள்ள 9 மத்தியச்சிறைகள் மற்றும் கிளைச்சிறைகளில் சுமார் 5 ஆயிரம் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

    தொழில் திறனுக்கேற்ப 3 வகையாக கைதிகள் பிரிக்கப்பட்டு சிறையினுள் பல்வேறு விதமான வேலைகள் வழங்கப்படுகிறது. அவர்களின் பணித்திறனுக்கேற்ப 60 ரூபாய், 80 ரூபாய் மற்றும்100 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    இந்த கூலி தொகையில் 50 சதவீதம் சிறையில் கைதிகளுக்கான பராமரிப்பிற்காகவும், 20 சதவீதம் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்கவும் சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.

    தண்டனைக்கு பின்னர் விடுதலையாகும் கைதிக்கு அவர் சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வெறும் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

    இப்படி தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481-ல் மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கே.கே.ராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    கைதிகளின் கூலியில் இருந்து மிகப்பெரிய தொகை சிறை நிர்வாகத்தால் பிடித்தம் செய்யப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்துக்கு குறைவான ஊதியம் பெறும் கைதிகளிடம் இருந்து
    அவர்களின் பராமரிப்புக்காக 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, முறையற்றதும் கூட என கண்டம் தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சிறைகளில் கைதிகளின் உணவு, உடைகள் ஆகியவற்றுக்காக நாளொன்றுக்கு 153 ரூபாய் செலவாகிறது என குறிப்பிட்டார்.

    இருப்பினும் 100, 80 மற்றும் 60 ரூபாய் தினக்கூலி வாங்கும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்யும் தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481 அரசியலமைப்பு சட்டமீறலாகும். 

    கட்டாய வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கும் எதிரானதாகும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏற்கத்தகுந்த சில காரணங்களுக்காக அவர்களின் கூலியில் ஒரு சிறிய தொகையை வேண்டுமானால் அரசு பிடித்தம் செய்யலாம் என அறிவுறுத்தினர்.

    அதேவேளையில், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்க சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    Next Story
    ×