search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கூட்டணி அமைக்க 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை- தினகரன் பேட்டி
    X

    புதிய கூட்டணி அமைக்க 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை- தினகரன் பேட்டி

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக 5 கட்சிகளுடன் அ.ம.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #parliamentelection

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு 4 1/2 ஆண்டு மக்களை கசக்கி பிழிந்து விட்டு தேர்தல் வரும் நிலையில், ஞானோதயம் வந்தது போல வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இதையெல்லாம் ஆட்சிக்கு வந்த உடன் செய்திருக்க வேண்டும். சில அறிவிப்புகள் நல்ல அறிவிப்பாக இருந்தாலும், தேர்தலை மனதில் வைத்து அறிவித்திருப்பதால் அரசை நம்பும்படியாக இல்லை.

    இந்த திட்டங்களை மீண்டும் தொடர்வார்களா? என்பது தெரியவில்லை. இது தேர்தலுக்கான பட்ஜெட்டாகத்தான் உள்ளது. அதைத் தவிர அதில் வேறொன்றுமில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல தவறான நடவடிக்கைகளால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்பதுதான் அனைவரது கருத்தும். தேர்தலை மனதில் வைத்து அவர்களது ஒவ்வொரு செயல்பாடும் உள்ளதால், தமிழக மக்கள் அதை பெரிதாக எடுத்து கொண்டதாக தெரிய வில்லை.

    தமிழக அரசை மத்திய பா.ஜ.க. அரசு தாங்கிப் பிடிப்பதால், தமிழக அமைச்சர்கள் இந்த பட்ஜெட்டை பாராட்டித்தான் ஆக வேண்டும். திருவாரூர் இடைத்தேர்தலையே சந்திக்க பயந்த தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், பாராளுமன்ற தேர்தல் பணிகளுக்காக குழு அமைந்திருக்கிறார்கள்.

    அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. தேவைப்பட்டால் குழு அமைப்போம். தேர்தலுக்காக மக்களை சந்தித்து வருகிறோம். வேறு எந்த கட்சியும் மக்களை சந்திக்கவில்லை. தேர்தலை சந்திக்கவும் தயாராக இல்லை.

    4, 5 கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். முடிவான பின்னர் அறிவிக்கப்படும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எப்போதுமே தேவையானது. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தின் சுயாட்சி தத்துவத்தையே குலைக்கும் வகையில் மாநிலத்தின் உரிமைகள் பலவற்றை மத்திய அரசு கையிலெடுத்து கொண்டுள்ளது. இவற்றை தவிர்க்க அண்ணா துரையின் கொள்கை இந்தியாவுக்கு எப்போதும் தேவையாக உள்ளது.

    கடந்த 60 ஆண்டுகளாக தேசிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழகத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளை ஆதரித்தால் யாரிடமும் எதிலும் சமரசம் செய்து கொள்ள தேவையில்லை. மாநில கட்சிகள் தான் இனி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறணும். இதைத் தான் 2014-ல் தமிழக மக்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

    ஜெயலலிதாவின் தொண்டர்களால் நடத்தப்படும் அ.ம.மு.க., வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் நலன்களை காப்பதற்காக ஒத்துப்போகும் பிரதமரை தேர்ந்தெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #parliamentelection 

    Next Story
    ×