search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - தென்மாவட்ட ரெயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு
    X

    மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - தென்மாவட்ட ரெயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு

    மத்திய நிதிநிலை அறிக்கையில் தென்மாவட்டங்களுக்கு புதிய ரெயில் தொடர்பான எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டப்பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #Budget2019
    விருதுநகர்:

    மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தென்மாவட்டங்களுக்கு புதிய ரெயில்கள் பற்றிய எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த காலங்களில் ரெயில்வே அமைச்சகத்திற்கென தனியாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன் சேர்த்து ரெயில்வே துறை தொடர்பான புதிய அறிவிப்புகளும் நிதிஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் ரெயில்வே துறையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. கொல்லம்-சென்னை இடையே மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்தபோது கொல்லம் மெயில் என்ற தினசரி ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின்பு கொல்லத்திலிருந்து சென்னைக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்குவதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

    மேலும் மதுரை-தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக 143 கி.மீ. தூர அகல ரெயில்பாதை திட்டத்திற்கு போதிய நிதிஒதுக்கீடு செய்யப்படாததால் இந்த பணியும் முழுவீச்சில் நடைபெறாமல் முடக்கம் அடைந்துள்ளது. மதுரை-நாகர்கோவில் இடையே தென்மாவட்டங்களுக்கான இருவழி ரெயில்பாதைபணிக்கு நிதி ஒதுக்கீடு போதிய அளவில் கிடைக்காததால், இந்த பணியின் செயல்பாட்டின் வேகம் குறைந்தது.

    கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தபணி 3 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருவழி ரெயில்பாதை செயல்பாட்டிற்கு வரும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்திருந்த போதிலும், தற்போதுள்ள நிலையில் இந்த பணி முடிய 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என கூறப்படுகிறது.

    ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் இயக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத்தவிர தென்மாவட்டங்களுக்கு புதிய ரெயில்களோ அல்லது ரெயில் நீட்டிப்பு தொடர்பாகவோ எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்த தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவும் ரெயில்வே அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் சிறிய நகரங்களுக்கு கூட ரெயில்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

    நெல்லையை மையமாக கொண்டு கன்னியாகுமரி தென்காசி, தூத்துக்குடி உள்ளடங்கிய தனி ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கைக்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதேபோல மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டத்திற்கும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் அந்த பணியும் முறையாக நடைபெறவில்லை.

    மொத்தத்தில் ரெயில்வே அமைச்சகம் தமிழகத்திலுள்ள தென்மாவட்டங்களை முற்றிலுமாக புறக்கணிப்பது நீடித்து வருகிறது. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளும் ரெயில்வே அமைச்சகம், தென்னக ரெயில்வே அதிகாரிகளிடம் முறையிடாததால் தென்மாவட்ட புறக்கணிப்பு தொடர்கிறது.

    விருதுநகர்-மானாமதுரை இடையே 61 கி.மீ. அகல ரெயில்பாதை பணி ரூ.230 கோடி செலவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த ரெயில்பாதையில் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. வாரந்திர புதுச்சேரி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விருதுநகர் மாவட்ட கிழக்கு பகுதி மக்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    இன்னும் அவர்கள் நீண்டதூர ரெயில்பயணத்திற்கு விருதுநகரை தான் தேடி வரவேண்டியுள்ளது.எனவே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தென்மாவட்ட எம்.பி.க்கள், ரெயில்வே திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு ரெயில்வே அமைச்சகத்திடம் உரிய முறையில் வாதாடி பெறவேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. #Budget2019
    Next Story
    ×