search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - அதிமுக அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு
    X

    பாராளுமன்ற தேர்தல் - அதிமுக அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. #ParliamentElection #ADMK
    சென்னை:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் 37 இடங்களை வென்றது. பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. தி.மு.க. கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.



    தற்போது ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க. புதிய தலைமையுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தி.மு.க.விலும் கருணாநிதி மறைவுக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. களம் காண உள்ளது. இரு கட்சிகளுமே தங்களின் பலத்தை காட்ட வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியிருக்கிறது.

    கூட்டணி விஷயத்தில், தி.மு.க. தனது அணியை கிட்டத்தட்ட அமைத்து விட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பில் குழுவும் அமைக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதான கட்சியான அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் ஏற்கனவே குழு அமைத்துள்ளது. ஆனால் இதுவரையில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியும் இணையவில்லை. பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. நடத்தி வருகிறது.

    அதே நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற தொண்டர்களிடம் இருந்து இன்று (திங்கட் கிழமை) முதல் விருப்ப மனுக்களை அக்கட்சி வாங்க உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று முதல் 10-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் பந்தயத்தில், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராக கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது. #ParliamentElection #ADMK
    Next Story
    ×