search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    கிருஷ்ணகிரி நகரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகரில் இருந்து லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக ராயக்கோட்டைக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், அரசு மகளிர் கலைக்கல்லூரி, மாவட்ட விளையாட்டு அரங்கம், தனியார் பள்ளிகள், மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இதனால் இந்த சாலை எந்த நேரமும் வாகன நெரிசலுடன் காணப்படும்.

    மேலும் சாலையின் இருபுறங்களிலும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வந்தன. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கவிதா தலைமையில் உதவி பொறியாளர்கள் அன்பரசன், சாலை ஆய்வாளர்கள் சண்முகம், ரமேஷ் ஆகியோர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலமாக சாலையில் இருந்து கடைகளின் விளம்பர பலகைகள், தற்காலிக கடைகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொண்டனர்.

    இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றிட கோரி, கடந்த 2 மாதங்களில் 4 முறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. எனவே போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×