search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற மருந்து கடை உரிமையாளர்கள்
    X

    கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற மருந்து கடை உரிமையாளர்கள்

    கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்று வந்த மருந்து கடை உரிமையாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் உள்ள சில மருந்து கடைகளில், டாக்டர் சீட்டுகள் இல்லாமலேயே மயக்க மருந்து, மாத்திரைகளை முறைகேடாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.

    கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் இதனை அதிக விலைக்கு வாங்கி போதைக்காக பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சரவணம்பட்டி வெங்கடேசபுரத்தை சேர்ந்த மருந்துகடை உரிமையாளரான சுப்பிரமணி(வயது 53) என்பவரை மடக்கிப் பிடித்தனர். இவரிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மனநோயாளிகளுக்கு தூக்கத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் விற்கக்கூடாது. 10 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையின் விலை ரூ.30 ஆகும். இவற்றை முறைகேடாக பதுக்கி வைத்து ரூ.500-க்கு மேல் விற்று வந்துள்ளார்.

    கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்கள், இந்த மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணி மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் யார்- யாருக்கெல்லாம் இந்த மாத்திரைகளை கொடுத்துள்ளார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் ‘நைட்ரசீரம்’ என்ற போதை மாத்திரைகள் விற்றதாக கடை உரிமையாளரான மதனவேல்(41) என்பவரை கைது செய்தனர். இவர் மீதும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேறு ஏதேனும் கடைகளில் இதுபோன்ற முறைகேடாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×