search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
    திருவாரூர்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கஜா புயல் மறு கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட இயக்குனர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். கஜா புயல் மறு கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட கூடுதல் இயக்குனர் பிரதீப் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கஜா புயல் புனரமைப்பு திட்ட இயக்குனர் ஜெகநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக கான்கிரீட் வீடுகளை கட்டித்தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டித்தர ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி, நடவு செய்திட துறை அதிகாரிகள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் கஜா புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு ஏதுவாக வேளாண் பொறியியல் துறை மூலம் மரங்களை அறுக்கும் எந்திரம் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×