search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    9 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைக்கு திரும்பினர்
    X

    9 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைக்கு திரும்பினர்

    கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று 9-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. இதில் வேலைநிறுத்தத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதில் இருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo


    Next Story
    ×