search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு
    X
    கொள்ளை நடந்த வீடு

    வங்கி ஊழியரை தாக்கி நகை, பணம் கொள்ளை - போலீசார் விசாரணை

    நெல்லையில் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் சியோன் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது62). இவர் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் கிளார்க்காக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நளினி (54) தாழையூத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஜான்சி ராணி, சொரூபராணி (26) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

    ஜான்சிராணி கணவருடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.சொரூபராணியின் கணவர் வினோதன் தாழையூத்தில் வசித்து வருகிறார். சொரூபராணி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு சாமுவேல் ஒரு அறையிலும், அவரது மனைவி நளினி மற்றும் மகள் சொரூபராணி ஆகியோர் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சாமுவேல் எழுந்து சென்றார்.அதற்குள் ஒரு வாலிபர் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியுடன் வீட்டிற்குள் நுழைந்தார். சாமுவேல் சத்தம் போடவே, அவரை இரும்பு கம்பியால் தாக்கி துணியால் வாயை கட்டினான்.

    சாமுவேலின் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள் வந்தனர். அவர்களை அந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டி நகை அணிந்துள்ளார்களா? என்று தேடினான். ஆனால் அவர்கள் நகைகள் எதுவும் அணியவில்லை. இதனால் அவர்களை அருகில் உள்ள அறைக்குள் தள்ளி கதவை பூட்டினான்.

    சத்தம் போட்டால் சாமு வேலை கொலை செய்து விடுவதாக மிரட்டினான். பின்னர் சாமுவேலின் வாய்க்கட்டை அவிழ்த்து நகை-பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டினான். சாமுவேல் பதில் சொல்லாததால் அவரது கையில் அரிவாளால் வெட்டினான். மேலும் இரும்பு கம்பியாலும் சரமாரி தாக்கினான். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    பின்னர் அந்த மர்ம நபர் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து நகை-பணத்தை தேடினான். அங்கு மறைத்து வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்தையும், தங்க மோதிரம், கம்மல் ஆகியவற்றை திருடினான். மேலும் பீரோவில் இருந்த ‘செக்’ புக்கையும் எடுத்து கொண்டு தப்பியோடி விட்டான்.



    பின்பு சாமுவேல் அறை கதவை திறந்து மனைவி, மகளை மீட்டு வீட்டிற்கு வெளியே வந்து கொள்ளை நடந்த விபரத்தை அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிமுருகன், கோல்டன் விஜய் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் மோப்பம் பிடித்தப்படி ஓடி ரோட்டில் சென்று நின்று விட்டது. இந்த கொள்ளை குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×