search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்- முக ஸ்டாலின்
    X

    சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்- முக ஸ்டாலின்

    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #TNAssemblyElection
    சேலம்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் சேலம் வந்தார்.

    இன்று காலை சேலம் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் மு.க.ஸ்டாலின் காரில் அங்கு வந்தார். முதலில் அவர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருக்கிறார்களா? என பெயர் வாசித்து ஆய்வு செய்தார்.

    விரைவில் 21 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 21 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி உறுதியாக உள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி தலைதூக்க விடக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    நாங்கள் உத்தரவு போட்டாலும், அதனை செயல்படுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது. உத்தரவுகளை அறிவிப்பது மட்டும் தான் நாங்கள். அதனை நிறைவேற்றுபவர்கள் நீங்கள்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியில் தி.மு.க.வுக்கு எத்தனை ஓட்டுகள் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டுகள் எவ்வளவு உள்ளது. இந்த ஓட்டுகளை நாம் வாங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.

    தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்களை நாம் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தி.மு.க. பெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மறுக்கிறார்கள். இதற்கான கூட்டம் தான் இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.


    இன்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனை அராஜகங்கள் அரங்கேறுகிறது. இது ஊழல் ஆட்சி மட்டுமல்ல. கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல. கொலைகார ஆட்சியாக நடக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. தீர்ப்புக்கு பின் இந்த ஆட்சி நீடிக்காது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. வெற்றிக்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசியதாவது:-

    கடந்த 3-ந்தேதி திருவாரூரில் தலைவருடைய தொகுதியில் புலிவிலங்கு என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் நான் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தேன். இதனை தொடர்ந்து எல்லா தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வரலாம் என நேற்று இரவு திடீரென முடிவு எடுத்தேன். நியாயமாக இன்று காலை நான் சேலத்தில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். மாலையில் ஈரோட்டுக்கு போக வேண்டும். 2 நாட்களாக நான் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

    கிராமத்தில் இருந்து தான் அரசியல் தொடங்குகிறது. கிராமங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கிறது. முதல் முதலில் மக்கள் பிரநிதிகளை தேர்ந்தெடுக்கிற முறை எங்கிருந்து தொடங்குகிறது என்று சொன்னால் கிராமத்தில் இருந்து தான்.

    இது படிப்படியாக மாறி வாக்குச்சீட்டு முறைக்கு வந்து விட்டது. இப்போது எலக்ட்ரானிக் முறைக்கு வந்து விட்டது.

    எம்.பி.யை தேர்ந்து எடுக்கிறோம். அவர் பாராளுமன்றத்திற்கு போகிறார். 6 சட்டமன்ற தொகுதிக்கு சேர்த்து ஒரு எம்.பி.

    அதுபோல் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ. தேர்ந்தெடுத்து சென்னை கோட்டைக்கு அனுப்புகிறோம். பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவார்கள். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள்.

    அதற்கு அடுத்து பார்த்தீர்களானால் உங்கள் ஊருக்கு ஒரு தலைவரை, ஒரு மெம்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் ஊர் பிரச்சனையை உள்ளாட்சி அமைப்பு கூட்டத்திலோ, ஊராட்சி ஒன்றிய கூட்டத்திலோ பேசி அதற்கான நிதியை வாங்கி மத்திய அரசு கிராமத்திற்கு என தனியாக நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதியை வாங்கி பயன்படுத்தி அந்த காரியங்களை செய்து முடிக்க வேண்டும். இது தான் உள்ளாட்சி அமைப்பு.

    இப்போது உள்ளாட்சி அமைப்பு இல்லை. ஆட்சியும் முறையாக இல்லை. மத்தியில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி எதுவும் முறையாக இல்லை. ஆகவே முறையாக இல்லாத காரணத்தினால் தான் இன்றைக்கு நாடு ஒரு குட்டிச்சுவரான நிலைக்கு தள்ளிக்கொண்டு போயிருக்கிறது.

    நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இங்கு வந்திருக்கிறீர்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம். மக்களுடைய மனங்களை எல்லாம் வெல்வோம் என்ற அந்த முழக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்த பணியை தொடங்கி இருக்கிறோம்.

    நான் 2 வாரத்திற்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு போயிருந்தேன். அங்கு மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இதில் பல்வேறு மாநில தலைவர்கள், முதல்-அமைச்சர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள் வந்தார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வந்தார்கள்.

    எல்லோரும் என்னை பார்த்து கேட்ட முதல் கேள்வி கிராம சபை கூட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துகிறீர்கள்?. உங்களால் எப்படி முடிகிறது என கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். நான் சொன்ன உடனே அவர்கள் திருப்பி சொன்னார்கள். இதுவரைக்கும் தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே, உலகத்திலே இப்படிப்பட்ட கிராம சபை கூட்டத்தை யாரும் நடத்தியிருக்க முடியாது என பெருமையாக சொன்னார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து மு.க.ஸ்டாலின் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் ஒவ்வொரு பேராக எழுந்து வந்து தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள குறைகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

    முன்னதாக நேற்று இரவு சேலம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #TNAssemblyElection
    Next Story
    ×