search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் வழக்குகளில் நாளை விசாரணை - தூத்துக்குடியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
    X

    ஸ்டெர்லைட் வழக்குகளில் நாளை விசாரணை - தூத்துக்குடியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

    ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரணை நடத்துகிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

    அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த இருமனுக்கள் மீதும் விசாரித்த சுப்ரீம் கோர்ட் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவிட்டது.

    இதையடுத்து ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்தது. அந்த மனுமீதான விசாரணை கடந்த 24-ந் தேதி நடந்தது.

    அப்போது அரசு தரப்பு மற்றும் ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். மேலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் வாதாடினார்.

    தொடர்ந்து வாதிட்ட ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல், ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும், ஆலையை திறக்க இடைக்கால உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும், ஏற்கனவே ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் நாளை (29-ந் தேதி) மொத்தமாக விசாரித்து விரைவில் தீர்ப்பளிப்போம் என்று நீதிபதிகள் கூறினர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரணை நடத்துகிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பண்டாரம்பட்டி, குமாரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் சஸ்பெண்டு செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் வராத காரணத்தால் 205 பள்ளிகள் மூடப்பட்டன. இன்று பணிக்கு வராத ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு இன்று மாலை நடைபெறும். பகுதி நேர ஆசிரியர் பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 2600 பேர் விண்ணப்பம் வழங்கி உள்ளனர்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite

    Next Story
    ×