search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் - 1,084 பேர் கைது
    X

    4-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் - 1,084 பேர் கைது

    நீலகிரி மாவட்டத்தில் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,084 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    ஊட்டி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருக்கும் நிலையில் அரசு பணியில் காலி இடங்களை நிரப்ப மறுப்பதோடு, சேர்க்கப்படும் பணியிடம் கூட ஒப்பந்த நியமனமாக, வெளிமுகமை நியமனமாக மாற்ற வழிவகுக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    நீலகிரியில் கடந்த 2 நாட்களாக ஊட்டி ஏ.டி.சி. திடல், மத்திய பஸ் நிலையம், கூடலூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4-வது நாளாக பணிக்கு செல்லாமல் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் நூற்றுக்கணக்கானோர் முக்கிய சாலையான ஊட்டி-குன்னூர் சாலை சந்திப்பு பகுதியில் திரண்டனர். இதனால் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஜாக்டோ-ஜியோ நிர்வாகி தினகரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை தொடங்கி வைத்தார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 365 பெண்கள் உள்பட 640 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர்.

    ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கியது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை படித்துக்கொண்டு இருந்தனர். பிளஸ்-2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடங்களை படித்தனர். இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி இருந்தது. ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வராத காரணத்தால், 4-வது நாளாக நேற்றும் மூடப்பட்டு இருந்ததை காண முடிந்தது. சில பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

    ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 730 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நிர்வாகிகள் 58 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143-ன் படி சட்ட விரோதமாக கூடுதல், 341-ன் படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ-ஜியோ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 444 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஊட்டி, கூடலூரில் மொத்தம் 1,084 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #JactoGeo
    Next Story
    ×