search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு - காஞ்சீபுரம், திருவள்ளூரில் மாணவர்கள் பாதிப்பு
    X

    ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு - காஞ்சீபுரம், திருவள்ளூரில் மாணவர்கள் பாதிப்பு

    காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-ம் நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இதனால் திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பெரும்பாலான சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை என்று திரும்பி சென்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன், பாஸ்கர், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் மற்றும் மறியல் 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் விக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு வருவாய்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வருவாய்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினரும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (25-ந் தேதி) மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×