search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
    X

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

    ஜாக்டோ-ஜியோஅமைப்பினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா தலைநகரங்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    பரமக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா முன்னிலை வகித்தார்.

    கீழக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழாசிரியர் கழக அமைப்பாளர் குமாரவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டதால் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 244 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படாமல், பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பள்ளிகளிலும் கல்வி பணி பாதிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தலைவர் துரைராஜ், செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டதால் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்டவைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகங்களை நாடி வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதால் ஒட்டுமொத்தமாக அரசு பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளில் பணியாற்றிவரும் 15 ஆயிரத்து 748 பேரில், 11 ஆயிரத்து 182 பேர் பணியில் ஈடுபட்டதாகவும், 281 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மக்களின் அரசு சார்ந்த பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனியசாமி, செயலாளர் ஆனந்தராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணை செயலாளர் குருசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் தாமஸ் இமானுவேல் ஜேம்ஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாலமுருகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணகி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மானாமதுரை யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மானாமதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜீவா முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×