search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் தீர்ப்பு
    X

    ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் தீர்ப்பு

    சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #Jayalalithaa
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக் கூடாது. அதுவும் கடலோர ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராகவும் நினைவிடம் கட்டப்படுகிறது என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மனுதாரர் சார்பில் வக்கீல் சிவஞானசம்பந்தம் ஆஜராகி வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் இன்று பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-



    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு தனிக் கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக மாநில ஐகோர்ட்டு, அந்த தண்டனையை ரத்து செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு அளிப்பதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது கடைசி மூச்சு இருக்கும் வரை, கர்நாடகா மாநில ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புதான் அமலில் இருந்துள்ளது. அதனால் ஜெயலலிதா சாகும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி இல்லை. அவரை குற்றவாளி என்று கூற முடியாது.

    அதேநேரம், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கொள்கை முடிவு என்பது மக்களின் நலனுக்காக எடுக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

    மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பொழுது போக்கு இடமாக கட்டாமல், பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். மக்களிடம் வரியாக பெற்ற பணத்தை கொண்டு மறைந்த முதல்- அமைச்சர்கள், தலைவர்களுக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. மக்கள் வரிப்பணம் எல்லாம் வீணாகுகிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், இதுபோன்ற தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என்று மக்களுக்கு நன்மை தருவதை கட்டி, அதற்கு அந்த தலைவர்களின் பெயர்களை சூட்டினால், ஆண்டாண்டு காலத்துக்கு அந்த தலைவர்களின் பெயர் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும். அதேநேரம், இதையெல்லாம் அரசு தான் செய்யவேண்டும்.

    ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நினைவிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர். #MadrasHC #Jayalalithaa
    Next Story
    ×