search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில்துறைக்கு  ஏற்ற மாநிலம் தமிழகம்- உலக முதலீட்டாளர் மாநாட்டில் ராணுவ மந்திரி பேச்சு
    X

    தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம்- உலக முதலீட்டாளர் மாநாட்டில் ராணுவ மந்திரி பேச்சு

    உலக முதலீட்டாளர் மாநாட்டில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தொழில்துறைக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவித்தார். #GIM2019 #NirmalaSitharaman
    சென்னை:

    சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    தொழில் செய்ய உகந்த மாநிலமாகவும், திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. தொழில்துறைக்கு ஏற்ற வகையில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகம் செய்தவர்கள் தமிழக மன்னர்கள். கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இதற்கான கல்வெட்டுகள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள கட்டடக்கலை மற்றும் ஆலயங்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் ராணுவ தொழிற்பாதையை மத்திய அரசு அமைக்க உள்ளது.

    இப்போது உலக அளவில் வளர்ச்சியிலும் தொழில் துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மின்னணு நிர்வாகம், காலநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட தூய எரிபொருள் துறையிலும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.


    நாட்டின் உணவு பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6 சதவீதத்துக்கு மேல் பராமரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் செய்த மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக, ஜிஎஸ்டி வெற்றிகரமாக  அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலையாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் தமிழகம் முன்னேறுவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். #GIM2019 #NirmalaSitharaman
    Next Story
    ×