search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை- தினகரன்
    X

    அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை- தினகரன்

    அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ADMK #BJP
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். தற்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    அவர் அ.தி.மு.க. தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து தாய் கழகத்தில் இணைய வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என்று புதுச்சேரி வந்த மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்தார்.

    தினகரன் எனது நண்பர். அ.தி.மு.க.வின் இரு பிரிவுகளும் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் செயல்பட வேண்டும். இரு தரப்பினரும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்து தேர்தலை சந்திக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பரமக்குடி வந்த தினகரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


    ராம்தாஸ் அத்வாலே போன்றவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்கிறார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம் ஒரு போதும் நடக்காது.

    அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரவும் மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக 4 தென் மாவட்டங்களின் அ.ம.மு.க. வின் தகவல்-தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரன் பேசுகையில், “அ.ம.மு.க. சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே மதவாத சக்திகளுடன் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம்” என்றார்.

    மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து மக்கள் நல திட்டங்களையும் அ.ம.மு.க. நிறைவேற்ற பாடுபடும். குறிப்பாக பெண்கள் நலனுக்காக நீண்ட கால திட்டமான பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவோம், ஜெயலலிதா காட்டிய பாதையில் படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என்றும் தினகரன் பேசினார். #TTVDhinakaran #ADMK #BJP
    Next Story
    ×