search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    நெல்லையில் இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    நெல்லையில் இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் ராம்குமார் (வயது25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று விடுப்பு எடுத்துக்கொண்டு கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தார்.

    இன்று அதிகாலை அந்த ரெயில் நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்த ராம்குமார் திடீரென ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தின் நடுவே ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பது குறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ராஜன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் வாலிபர் ராம்குமாரின் உடலை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ராம்குமார் மரணம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×