search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றில் எலும்புகூடாக கிடந்தது மாயமான கோவை பெண்ணா? டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு
    X

    கிணற்றில் எலும்புகூடாக கிடந்தது மாயமான கோவை பெண்ணா? டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு

    நாகர்கோவில் அருகே கிணற்றில் எலும்புகூடாக கிடந்தது மாயமான கோவை சேர்ந்த பெண்ணா எனபது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.

    இவருக்கு பார்வதிபுரம் கிறிஸ்டோபர் நகரில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் ஒரு கிணறு இருக்கிறது. இங்கு வீடு கட்ட திட்டமிட்டு அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றது.

    இதற்காக தென்னந்தோப்பில் உள்ள கிணற்றை தூர்வாரும் வேலைகள் நடந்தது. இதில் தொழிலாளர்கள் கிணற்றை தூர்வாரியபோது கிணற்றுக்குள் ஒரு எலும்புக்கூடு கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்ததும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது பற்றிய தகவல் ஜெயக்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இதுபற்றி இரணியல் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கிணற்றில் கிடந்த எலும்புக்கூடு வெளியே எடுக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுப்பணி நடந்தது. அந்த எலும்புக்கூடுடன் ஒரு கொலுசும், பெண்கள் அணியும் ஆடையின் ஒரு பகுதியும் இருந்தது. இதனால் கிணற்றில் எலும்புக்கூடாக கிடந்தது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    டி.என்.ஏ. பரிசோதனை செய்வதன் மூலமே இதை முடிவு செய்யமுடியும் என்பதால் அந்த எலும்புக் கூட்டை டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது அந்த எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. அந்த பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் கோவை மாவட்டம் கல்லம்மாபாளை பகுதியை சேர்ந்த தேவசகாயம் என்பவரின் மகள் லிசி அடைக்கலமேரி (வயது 25) என்ற பெண் 2012-ம் ஆண்டு தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை, மாயமாகிவிட்டார். இதுபற்றி அவரது தாயார் ஆசாரிப்பள்ளம் போலீசில் 21.7.2012-ல் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் மாயமான லிசியை கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்திவந்த நிலையில்தான் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே கிணற்றில் கிடந்தது லிசியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து லிசியின் தாயாரை இங்கு வரவழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். எலும்புக் கூடு கிடைத்தது பற்றிய தகவல் லிசியின் தாயாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்தபிறகு அவரிடம் எலும்புக்கூடு, கொலுசு, ஆடை ஆகியவற்றை காண்பித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    Next Story
    ×