search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈசநத்தம் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சிசபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசிய காட்சி.
    X
    ஈசநத்தம் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சிசபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசிய காட்சி.

    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பிக்கவே ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார்- முக ஸ்டாலின்

    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #OPanneerSelvam
    கரூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட வாரியாக ஒரு சில ஊராட்சி கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகேட்டு பேசி வருகிறார்.

    அதன்படி கரூர் மாவட்டத்தில் 2 ஊராட்சி சபை கூட்டங்களில் இன்று அவர் பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உங்கள் பிரச்சனைகளை, குறைகளை, எண்ணங்களை புரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சிக்கும், மோடி தலைமையில் நடைபெறும் மத்திய பாசிச, மதவாத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வருவது போல் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். பக்தர்களுக்கு புனித இடம் கோவில் என்றால் எங்களுக்கு கிராமங்கள் தான் புனித ஸ்தலம். இங்கிருந்துதான் அரசியல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது வாக்குப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    தற்போது தமிழகம் முழுவதும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 17-ந்தேதிக்குள் அனைத்து கூட்டங்களும் முடிக்கப்பட்டு விடும். இந்த ஊராட்சி சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் அதிர்ந்துபோய் உள்ளனர். இதனால் அப்பட்டமாக பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    நான் துணை முதல்வராக இருக்கும்போது கிராமங்களுக்கு செல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12,617 கிராமங்களுக்கும், நூலகம் கொண்டு வந்தேன். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வளர்ச்சி பணிகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடிக்கு சேலத்தை தவிர வேறு எந்த ஊராவது தெரியுமா? ஜெயலலிதா செல்வாக்கால் ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கவலையில்லை. கமி‌ஷன், ஊழல், வசூல் என்ற நிலையில்தான் அவர்கள் உள்ளனர். விரைவில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.


    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். இது பற்றி விளக்கம் கேட்டால் யாகம் நடத்தவில்லை, சாமி மட்டுமே கும்பிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார். யாகம் நடத்த அது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? மக்களின் வரிப் பணத்தில் உருவான கோட்டையில் ஏன் யாகம் நடத்தினீர்கள்? பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். #DMK #MKStalin #OPanneerSelvam
    Next Story
    ×