search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டை வாலிபர் கொலையில் 5 பேர் கைது
    X

    முத்தியால்பேட்டை வாலிபர் கொலையில் 5 பேர் கைது

    முத்தியால்பேட்டை வாலிபர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பிரதிஷ் (வயது26) ஏ.சி. மெக்கானிக்கான இவர் பிளம்பிங், எலக்ட்ரிக்கல்ஸ் வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் பிரதீஷை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

    இந்த கொலை தொடர்பாக புதுவை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதீசை கொலை செய்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

    ரவுடியான பிரதீஷ் மீது ஆரோவில் போலீசில் கொலை வழக்கு உள்ளது. மேலும் பிரதீசும் சாமிபிள்ளை தோட்டம் அணைக்கரை பகுதியை சேர்ந்த ராஜேசும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சேர்ந்து ரவுடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நாளடைவில் யார் தாதா என்பது போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக அடிக்கடி இருவரும் மோதிக் கொண்டனர்.அதுபோல் மாட்டு பொங்கலன்று இவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ராஜேசை பிரதீஷ் மற்றும் அவரது தரப்பினர் வெட்டி கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் பிடியில் ராஜேஷ் தப்பி ஓடிவிட்டார். அதேவேளையில் நேற்று முன்தினம் மாலை ரஜேஷ் முத்தியால்பேட்டைக்கு வந்தபோது அவரை பிரதீஷ் கத்தியால் வெட்டினார்.

    இதையடுத்து ராஜேஷ் இதுபற்றி தனது அண்ணன் முரளியிடம் முறையிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முரளி தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற குஞ்சுமணி, பாண்டியன், விஜய் மற்றும் கிளியனூரை சேர்ந்த பிரதாப் ஆகியோருடன் சென்று பிரதீஷை வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொலையாளிகள் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு விரைந்து சென்று முரளி மற்றும் அவரது கூட்டாளிகளான மணிகண்டன் என்ற குஞ்சுமணி, பாண்டியன், விஜய், பிரதாப் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×