search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு- மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
    X

    10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு- மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

    இந்த இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாகத்தான் வழங்க முடியுமே தவிர, பொருளாதார வசதிகளின் அடிப்படையில் வழங்க முடியாது என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறியுள்ளது. இதுமட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டும் பல வழக்குகளில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்புகள் அளித்துள்ளன. இவை தெரிந்து இருந்தும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டமசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையையே மாற்றுகிறது.

    அதுமட்டுமல்ல பொருளாதாரத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்க முடியாது. இன்று ஏழையாக இருப்பவர் நாளை பணக்காரராக மாறி விடலாம். ஆனால், சமூக ரீதியாக பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், அப்படிப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத்தான் இடஒதுக்கீடு வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு என்று கூறி பொதுப்பிரிவினருக்கு வழங்க முடியாது. அதுவும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறுகின்றனர்’ என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘அந்த சட்ட மசோதாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மூத்த வக்கீல் வில்சன், ‘சட்ட மசோதாவில் குறிப்பிடவில்லை. ஆனால், கடந்த 7ந்தேதி நடந்த மந்திரி சபை கூட்டத்தில், மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது’ என்றார்.

    அரசியல் அமைப்புச் சட்டத்தில், பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கலாம் என்று கூறியுள்ளதே? என்று நீதிபதிகள் மற்றொரு கேள்வியை எழுப்பினர்.

    அதற்கு மூத்த வக்கீல், ‘பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் சாதி ரீதியாக பின்தங்கியவர்களே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் கிடையாது. எனவே, இந்த சட்டமசோதாவே அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்பதால், இதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

    மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜ கோபால், ‘மனுதாரர் சார்ந்துள்ள கட்சி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, அதாவது முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டாலும், தனிப்பட்ட கட்சி ரீதியான கொள்கையின் அடிப்படையில் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, எந்த பொதுநலனும் வழக்கில் இல்லை. மேலும், மனுதாரர் மாநிலங்களவை உறுப்பினர். இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ மனுதாரர் ஓட்டு போட்டிருந்தாலும், அந்த நடைமுறையில் கலந்துக் கொண்டுள்ளார். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பில் (மாநிலங்களவையில்) தோல்வி அடைந்த மனுதாரர், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் மற்றொரு அமைப்பான ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’ என்று வாதிட்டார்.


    மனுதாரர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும் ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறியதற்கு, மனுதாரர் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், ‘ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார்’ என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியதை ஏற்க முடியாது. அவரது இந்த வாதத்தை ஏற்க முடியாது’ என்றனர்.

    பின்னர், ‘இந்த 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கு?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இடஒதுக்கீடு பெறாதவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்களுக்கு என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

    அவர்கள் யார்? இட ஒதுக்கீடு பெறாதவர்கள் என்றால், முற்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் தானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பின்னர், இந்த வழக்கிற்கு மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற பிப்ரவரி 18ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #MadrasHC
    Next Story
    ×