search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தேவையில்லாதது- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி
    X

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தேவையில்லாதது- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வருகிற 24-ந்தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு துணி கட்டவும், மக்கள் கருப்பு நிற ஆடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மேலும் மக்களின் மனநிலைக்கேற்ப ஆலையை திறக்க விடாமல் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது. இவ்வாறான செயல்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக அமையும். எனவே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite #ThoothukudiCollector #SandeepNanduri
    Next Story
    ×