search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்தது -பெண் பலி
    X

    பண்ருட்டியில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்தது -பெண் பலி

    பண்ருட்டியில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பண்ருட்டி கெடிலம் ஆற்றில் பண்ருட்டி சக்தி கணபதி, திருவதிகை முத்து மாரியம்மன், காடாம்புலியூர், முத்துமாரியம்மன், அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன், தாழம்பட்டு முத்துமாரியம்மன், கோட்லாம்பாக்கம் கருமாரி அம்மன், பிள்ளையார் குப்பம் முத்தாலம்மன், தட்டாஞ்சாவடி காளியம்மன் ஆகிய சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

    இந்த விழாவில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் இரவு 7 மணிக்கு தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் கெடிலம் ஆற்று பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஏசுதாஸ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார்.

    கெடிலம் ஆற்று பாலத்தில் அந்த லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்தது.

    இதில் பல பக்தர்கள் லாரிக்கு அடியில் சிக்கி கதறினர். இதையறிந்த டிரைவர் ஏசுதாஸ் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தில் கடலூர் கோண்டூரை சேர்ந்த கோமதி (23) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் மாளிகம்பட்டை சேர்ந்த பார்வதி (15), வெண்ணிலா (16), அன்பு, தட்சிணாமூர்த்தி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு முத்துக்குமார் என்பவர் ஓடிச் சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டார். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக் காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×