search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலில் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை அதிகரிப்பு
    X

    கஜா புயலில் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை அதிகரிப்பு

    கஜா புயலால் தென்னை மரங்கள் அழிந்ததால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, பெரிய பட்டினம், தாமரைக்குளம், பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வந்தது.

    இங்கு பறிக்கப்படும் தேங்காய்களை மதுரையில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வந்தனர். அங்கிருந்து காங்கேயம், வெள்ளக்கோயில், ஈரோடு போன்ற ஊர்களில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    மாவட்டத்தில் சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் தேங்காய் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டது. தேங்காய் விலையும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

    இந்த விலை வீழ்ச்சி படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள் பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து கொப்பரை தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    கஜா புயலுக்கு முன்பு கிலோ ரூ.22க்கு விற்பனையான தேங்காயை புயலுக்கு பின் தேவை அதிகரிப்பால் தற்போது கிலோ ரூ.33 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தேங்காய் விலை வீழ்ச்சியும் சில வாரங்களில் சரியாவதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் கஜா புயலுக்கு பின்பு விலை அதிகரித்து வருகிறது.

    ரெகுநாதபுரம் தேங்காய் மொத்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டுகளில் மழை இல்லாததால் காய்களின் வடிவம் மாறி காய்ப்பு குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு தேங்காய் எடை 400 கிராம் வரை இருக்கும். மழை இல்லாததால் காயின் எடை குறைந்து தற்போது அதிகபட்சமாக 250 கிராம் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் நீர் ஆதாரம் உயர்ந்துள்ளது. ஆகவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறிக்கக் கூடிய தேங்காய் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி இப்படி பல்வேறு கூடுதல் செலவினங்களை தாங்கி கொண்டு தென்னை விவசாயிகள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னை விவசாயி பெரியபட்டினம் அப்துல் மாலிக் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்காய்க்கு விலை கிடைக்காமல் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்து தென்னந்தோப்புகளை வீட்டடி மனைகளுக்கு பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

    பல்வேறு சுமைகளை தாங்கி தென்னை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தோம். விலை அதிகரித்துள்ள நிலையில் மரத்தில் காய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

    மரத்திற்கு தண்ணீர் விடுவதற்கு கிணறுகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு தேங்காய் காய்ப்பு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.

    Next Story
    ×