search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலில் மோதல்- வாலிபர் கொலை
    X

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலில் மோதல்- வாலிபர் கொலை

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலையொட்டி மது குடிக்கும் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×