search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜனதா-அதிமுக கூட்டணி வருமா? - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    பாஜனதா-அதிமுக கூட்டணி வருமா? - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். #PonRadhakrishnan #BJP #ADMK

    திருச்சி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    அடுத்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாகிவிடும் என்பதால் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு செய்வதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கொண்ட மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

    இந்த கூட்டணிக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க.வும் மெகா கூட்டணியை உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியும் மேற்கண்ட கட்சிகளுடன் இணைந்து புதிய அணியை உருவாக்க நினைக்கிறது.

    பா.ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க.வில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இது தொடர்பாக கூறுகையில், “பாரதிய ஜனதாவை தூக்கி சுமக்க நாங்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது” என்று கூறினார்.

    அமைச்சர் ஜெயக்குமாரும் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், “நாங்கள் விரும்பினால்தான் யாருடனும் கூட்டணி வைப்போம்” என்று தெரிவித்தார்.

    இதற்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது சூடாக பதில் அளித்தார். “கூட்டணியை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் போது யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் அதிகாரம் உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணி முடிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை பா.ஜ.க. முடிவு செய்யும். துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். அவர் ஆழ்ந்த சிந்தனையாளர். மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைய வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார். அது அவருடைய கருத்து. அவர் கூறியதில் தவறில்லை. கூட்டணி குறித்து பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்யும்.

    இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தொடர்ந்து மத்திய அரசு மீது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். இது அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாததை காட்டுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அகியோரை ஜெயலலிதா வோடு நீங்கள்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜெயலலிதா, கலைஞர் போன்றோர்கள் ஆல மரங்கள். அதிலிருந்து வந்தவர்கள்தான் இப்போது உள்ள பறவைகள்.

    அதேபோன்று மோடி தலைமையிலான பா.ஜனதாவில் நாங்களும் பறவைகளாக உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சு வார்த்தை நடத்தவில்லை.

    அப்படி இருக்கும்போது, அ.தி.மு.க.விடம் இத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்பதாக கூறுவது எப்படி? தமிழ்நாட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமைந்தது. இப்போதும் பா.ஜனதா கூட்டணியில் எந்த கட்சிகள் இருப்பது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்.

    அதற்காக ஒருபோதும் பெரியண்ணன் போல நடந்து கொள்ள மாட்டோம். பா.ஜனதா தூய்மையான கட்சி. ஊழல் கரைபடியாத கட்சி. எங்களோடு கூட்டணியில் இருப்பவர்களும் அதே போன்றுதான் இருப்பார்கள்.

    தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக பயன்களை பெற்றுள்ளது.

    விழுப்புரம், நாகை வழியாக அமையும் கிழக்கு கடற்கரை சாலை ரூ.6 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி- கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.1,400 கோடியிலும், சென்னை-கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதேபோன்று சென்னை- திருச்சி வரையிலான தற்போதைய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகமான சாலை என்பதால் இதற்கு மாற்று திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றிருப்பது கொடூரமானது. இதன் மூலம் தி.மு.க. ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பதை காட்டுகிறது.

    கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். என் மீதே ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக கூறி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நான் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்திருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுவேன். தேர்தலுக்காக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனை பரப்பியவர்கள் யார் என்று தமிழக அரசு விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP #ADMK

    Next Story
    ×