search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்
    X

    மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்

    எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். #DMK #MKStalin
    சென்னை :

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கைகோர்த்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவும் வியூகம் அமைத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற கட்சிகள் ஒரே அணியாக செயல்பட்டு தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா கடந்த மாதம் 16-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், சோனியாகாந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்துவைத்தார்.

    விழாவில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிந்து பேசினார்.

    இதையடுத்து எதிர்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் 2-வது கட்ட ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    தமிழ்நாட்டில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா புறப்படுகிறார். கொல்கத்தா பிரிகேட் பூங்காவில் மம்தா பானர்ஜி நாளை ஏற்பாடு செய்துள்ள பேரணியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அவருடன் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலே‌ஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்பட பிற மாநில தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மாயாவதி பங்கேற்காத பட்சத்தில் அவரது கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரசாரம் மற்றும் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. #DMK #MKStalin
    Next Story
    ×