search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது
    X

    பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது

    பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டின் விற்பனையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். #Tasmac
    சென்னை:

    பொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இதன்காரணமாக பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு போகி பண்டிகை(14-ந்தேதி) அன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. அதேபோன்று பொங்கல் தினத்தன்று(15-ந்தேதி) 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி(நேற்று) மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகையின் போது கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×