search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை 4 வழிச்சாலை பணி - விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தல்
    X

    மானாமதுரை 4 வழிச்சாலை பணி - விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தல்

    மானாமதுரை 4 வழிச்சாலை பணியின் போது விபத்துகளை தவிர்க்க எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை பணிகள் 936 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட 9 இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. மதுரையில் இருந்து பரமக்குடி வரை சாலையின் பல இடங்களில் கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் குறுக்கிடுகின்றன. இதுதவிர நகருக்குள் செல்ல சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு 45 மீட்டர் அகலத்தில் போக வர தலா இரு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அனைத்தும் அதிகபட்ச வேகத்தில் செல்கின்றன.

    உள்ளூர் வாகனங்கள் சாலைகள் குறுக்கிடும் இடங்களில் வேகத்தை குறைத்து செல்கின்றன. ஆனால் வெளியூர் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் அதிக வேகத்தில் செல்கின்றன. விபத்து பகுதி, சாலை குறுக்கிடும் பகுதி என தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. மானாமதுரை அண்ணாசிலை பைபாஸ் ரோட்டில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு இருவழிகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாலம் முடிவடையும் இடத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ளது. உள்ளுர் வாகனங்களுக்கு இந்த பஸ் நிலையம் இருப்பது தெரிந்து வேகத்தை குறைத்து செல்கின்றனர். ஆனால் வெளியூர் வாகனங்கள் பஸ்நிலையம் இருப்பது தெரியாமல் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் பஸ்நிலையத்திற்கு திரும்பும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள் குறித்து தெரியாமல், வெளியூர் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன.

    நேற்று முன்தினம் பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். சாலை குறுக்கிடும் இடம் தெரியாமலேயே இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க சாலை குறுக்கிடும் இடங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×