search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரமாண்ட பெருமாள் சிலை வாகனம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை அடைந்தது
    X

    பிரமாண்ட பெருமாள் சிலை வாகனம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை அடைந்தது

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடை உள்ள பிரமாண்ட பெருமாள் சிலை வாகனம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை அடைந்தது.
    ஊத்தங்கரை:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா என்ற இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதையொட்டி 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் ஏற்றி கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந் தேதி புறப்பட்டது. வந்தவாசியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை நகரின் எல்லைக்கு கடந்த 5-ந் தேதி மாலை சிலை வந்து சேர்ந்தது.

    3 வால்வோ வாகனங்களின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி ரிங்ரோடு பகுதியை ராட்சத லாரி கடந்தது. வால்வோ வாகனங்களை இயக்குபவர்கள் மிக சாதுர்யமாக, கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மெல்ல மெல்ல வாகனத்தை இயக்கினர்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து, கடந்த 8-ந் தேதி செங்கம் நோக்கி பெருமாள் சிலையின் பயணம் தொடர்ந்தது. வழியில் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது.

    அப்போது பிரமாண்ட பெருமாள் சிலையை, திரளான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

    அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் சிலையை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து, ஏரிக்கரை பக்கமாக மண்டி வளாகத்தில் சிலையை வைத்துள்ளனர்.

    இங்கிருந்து ஊத்தங்கரையை கடந்து கிருஷ்ணகிரி சாலையை சென்றடைந்து விட்டால் மிக எளிதாக பெங்களூருவுக்கு சிலையை எடுத்துச்சென்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×