search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கலுக்கு 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் - சென்னைக்கு திரும்ப நாளை முதல் 3776 பஸ்கள் இயக்கம்
    X

    பொங்கலுக்கு 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் - சென்னைக்கு திரும்ப நாளை முதல் 3776 பஸ்கள் இயக்கம்

    பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக நாளை (17-ந் தேதி) முதல் 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. #Pongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது.

    கடந்த 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 13,871 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

    இதில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 785 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.39 கோடியே 2 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 3 நாட்கள் பஸ்கள் இயக்கியதன் முலம் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

    இந்த வருடம் பொங்கல் பண்டிகை விடுமுறையை கொண்டாட ஏதுவாக கூடுதலாக ஒருநாள் அரசு விடுமுறை அளித்ததால் வெளியூர்களுக்கு அதிகளவு மக்கள் பயணம் செய்துள்ளனர்.

    அரசு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர ஆம்னி பஸ்கள், ரெயில்களிலும் பல லட்சம் பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றனர்.



    வெளியூர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக நாளை (17-ந் தேதி) முதல் 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு வருகின்றன.

    நாளை காணும் பொங்கல் கொண்டாடி விட்டு பிற்பகல் முதல் பயணத்தை தொடங்குவார்கள். 18-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் தொடங்குவதால் வெளியூர் சென்றவர்கள் இன்று முதலே சென்னை திரும்ப தொடங்கி விட்டனர்.

    சென்னை நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை போலீசாரும் போக்குவரத்து கழக அதிகாரிகளும் செய்துள்ளனர்.

    வெளியூர்களில் இருந்து நாளை முதல் 20-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருகின்ற பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்திற்கும் வந்து சேரும்.

    நாளை காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் வேலூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் பூந்தமல்லியில் நிறுத்தப்படும். மற்றபடி அனைத்து பஸ்களும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Pongal
    Next Story
    ×