search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ந் தேதி மீண்டும் வேலைநிறுத்தம்
    X

    ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ந் தேதி மீண்டும் வேலைநிறுத்தம்

    ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ந் தேதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். #JactoGeo
    சென்னை:

    பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஜாக்டோ ஜியோ இந்த போராட்டங்களில் பங்கேற்று வேலைநிறுத்த போராட்டமும் நடந்தது.

    ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். தங்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அரசு புது பென்‌ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய சம்பள கமி‌ஷன் அமைக்கப்பட்டதன் அடிப்படையில் அரசு வழங்க வேண்டிய 21 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை தீர்வு காண முயலவில்லை.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துகிறோம். வருகிற 22-ந் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்.

    மாறுபட்ட 57 சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறது. அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

    ‘போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வேறுவழி இல்லாததால் வேலைநிறுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறி உள்ளனர். #JactoGeo

    Next Story
    ×