search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே தாசில்தாராக நடித்து பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே தாசில்தாராக நடித்து பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் கைது

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே தாசில்தாராக நடித்து பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. இவரது மனைவி நேற்று வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து குணசேகரன் வீட்டு முன்பு வந்து இறங்கினார்.

    பின்னர் அங்கிருந்த குணசேகரனின் மனைவியிடம், உங்கள் கணவருக்கு வறட்சி நிவாரண பணம் வந்துள்ளது. அதனை வாங்கி கொள்ளுங்கள். நான் தாசில்தாராக பணியாற்றி வருகிறேன்.

    வறட்சி நிவாரணம் பெற ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். பணம் இருந்தால் கொடுங்கள் என்றார். என்னிடம் பணம் இல்லை என்று குணசேகரனின் மனைவி கூறினார்.

    உடனே உங்கள் கம்மல், மூக்குத்தியை கழற்றி கொடுங்கள். அதை அடகு வைத்து பணம் வாங்கி கொள்கிறேன் என்றார். இதை நம்பிய குணசேகரனின் மனைவி அவற்றை கழற்றி ஒரு பேப்பரில் மடித்து வைத்து விட்டு வீட்டுக்குள் சென்றார்.

    இதைப்பார்த்த அந்த வாலிபர் நகையை அபேஸ் செய்து விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். உடனே குணசேகரனின் மனைவி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவரை திருவெண்ணைநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 38) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் தாசில்தாராக நடித்து பல பெண்களிடம் நகை அபேஸ் செய்ததும் தெரிய வந்தது. போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 5½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×