search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிக்கு அரசு வழங்கிய புயல் நிவாரண தொகையை மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்த வங்கி
    X

    விவசாயிக்கு அரசு வழங்கிய புயல் நிவாரண தொகையை மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்த வங்கி

    புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை , மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Storm

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.

    இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.

    அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm

    Next Story
    ×