search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் பயணம் - பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
    X

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் பயணம் - பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. #Pongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி, கே.கே.நகர் என சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து 3 ஆயிரத்து 529 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னையில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணி நிமித்தமாக தங்கி உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என பலரும் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஆம்னி பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. பயணிகள் கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக்கி கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஊர்களுக்கும் வசூலிக்கப்படும் கட்டண பட்டியல் குறித்து ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் உள்ள கட்டணம் வழக்கத்தை விட கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் சார்பில் இயக்கப்படும் சொகுசு பஸ்களின் கட்டண விவரமும் தனியாக இடம் பெற்றுள்ளன.

    சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தென் மாவட்ட ரெயில்கள் அனைத்தும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது.

    பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழிப்பறி திருடர்கள் யாரேனும் உலா வருகிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம், மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம் இயக்கப்பட்டதால், கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் இருந்து இன்று (சனிக்கிழமை) 3 ஆயிரத்து 741 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. #Pongal
    Next Story
    ×