search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க ராணுவத்தை பயன்படுத்துவோம் - ஐகோர்ட்டு எச்சரிக்கை
    X

    சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க ராணுவத்தை பயன்படுத்துவோம் - ஐகோர்ட்டு எச்சரிக்கை

    சட்டவிரோத கட்டிடத்தை அதிகாரிகள் இடிக்கவில்லை என்றால், ராணுவத்தை கொண்டு அவற்றை இடித்து தள்ளுவோம் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம், முட்டுக்காடு அடுத்துள்ள காரிக்காட்டு குப்பத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவர், தங்களது கிராமத்தில் பொது நிலத்தை ஆக்கிரமித்தும், திட்ட அனுமதியில்லாமலும் சிலர் கட்டிடங்களை கட்டுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பகுதியை இடிக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவுப்படி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மனுதாரர், தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், வட்டார வருவாய் அலுவலர் உள்பட பலர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததால், மனுதாரரின் கணவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில், அவர் சுயநினைவு இல்லாமல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை ஒரு ஆண்டாகியும் அதிகாரிகள் இடிக்கவில்லை. மனிதாபிமானம் இல்லாமல், மனுதாரரின் கணவரையும் தாக்கியுள்ளனர். இந்த செயலும் கோர்ட்டு அவமதிப்பதுதான். எனவே, மனுதாரருக்கு தன்னுடைய கணவரை யார் தாக்கியது என்று தெரிந்தால், அவர்களது விவரங்களை தாக்கல் செய்யவேண்டும். அவர்கள் மீது கோர்டடு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், விதிமீறல் கட்டிடப்பகுதியை அதிகாரிகள் இடிக்காமல் காலம் கடத்தியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலை இமாசலபிரதேச மாநிலத்தில் நிலவியபோது, அம்மாநில ஐகோர்ட்டு ராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க தயங்கமாட்டோம்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் ஆஜராகி கூறினர். அதுதொடர்பான வீடியோ காட்சியையும் நீதிபதிகளிடம் காட்டினர்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட பகுதியை இடித்து தள்ளவேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    Next Story
    ×