search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு வாங்க அதிகாலை 2 மணிக்கு குவிந்த பொதுமக்கள் - பணம் கிடைக்காததால் சாலை மறியல்
    X

    பொங்கல் பரிசு வாங்க அதிகாலை 2 மணிக்கு குவிந்த பொதுமக்கள் - பணம் கிடைக்காததால் சாலை மறியல்

    கோவையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வாங்க அதிகாலை 2 மணிக்கு குவிந்த பொதுமக்கள் பணம் கிடைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அன்னூர்:

    கோவையில் பொங்கல் பரிசு பெற அதிகாலையிலே பொதுமக்கள் குவிந்தனர்.

    தமிழகத்தில் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் பொங்கல் பரிசுடன் ரூ. ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ. ஆயிரம் ரொக்கபரிசு வழங்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு,ரூ. ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது.

    இதனை வாங்க பொதுமக்கள் அலைமோதி வருகிறார்கள். கோவை சிங்காநல்லூரில் நேற்று பொங்கல் பரிசு வாங்க வந்த 2 மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர்.

    கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் ரூ ஆயிரம் ரொக்கப்பணம் வாங்க இன்று அதிகாலை 2 மணிக்கே பொதுமக்கள் குவிந்தனர்.

    அவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் கஞ்சப்பள்ளி கிராமத்தில் 575 ரே‌ஷன் கார்டுகள் உள்ளது. அதில் 125 கார்டுகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    அதன் பின்னர் பொங்கல் பரிசு தொகை தீர்ந்து விட்டதாக அதிகார்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    அவர்கள் திருப்பூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கஞ்சப்பள்ளி பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு மொத்தம் ரூ. 14.45 லட்சம் வழங்க வேண்டும். ஆனால் தலைமை அலுவலகத்தில் இருந்து ரூ. 7.26 லட்சம் மட்டுமே வந்துள்ளது.

    இது தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் மலை மாவட்டமாக ஊட்டியிலும் உறைபனியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலை நேரத்திலேயே ரேசன் கடைகள் முன்பு திரண்டு இருந்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் இந்த மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் முன்பு பொங்கல் பரிசு பெற வேண்டும் என்பதால் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். #tamilnews
    Next Story
    ×