search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் இலவசம் - ஐகோர்ட் தீர்ப்பும், பல கேள்விகளும்... தலையங்கம்
    X

    பொங்கல் இலவசம் - ஐகோர்ட் தீர்ப்பும், பல கேள்விகளும்... தலையங்கம்

    பொங்களுக்கு தமிழக அரசு தரும் ரூ.1000 ரொக்கப் பரிசை வசதியானவர்களுக்கு வழங்க ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர். #Pongalgift #MadrasHC #TNGovt
    சென்னை:

    அய்யோ போச்சே... ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா ஆயிரம் ரூபாயாச்சே... ஆயிரம் ரூபாயாச்சே...இன்னிக்கு எப்படியாவது கிடைச்சுரும்னு விடியுமுன்பே வரிசையில் போய் காத்து நின்னேனே...இப்படி பண்ணிட்டீங்களே? நாங்கள் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்! கேட்டோமா...? இல்லை. ஆனால் பரிசு ஆயிரம் என்றதும் கையும் ஓடலை, காலும் ஓடலை எதிர்பாராத பரிசு. எப்படியும் கஷ்டப்பட்டு வாங்கிவிட வேண்டும் என்று ஆசை... ஒரு நாளா... ரெண்டுநாளா... மூணு நாள்! கொடுத்தாங்களே... இன்னிக்கு எப்படியாவது கிடைத்துவிடும் என்று நம்பித்தானே ரேஷன் கடையில் கால்கடுக்க காத்துக்கிடந்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டதே! இன்னும் ரெண்டுநாள் கழிச்சு தடைபோட்டிருக்க மாட்டாங்களா...? ஆசை யாரைவிட்டது! வடக்கு வீட்டு வனிதா வாங்கிட்டாளாம்... கீழத்தெரு ராசாத்தியும் வாங்கிட்டாளாம். அவுங்களும் வெள்ள கார்டுதான் வெச்சிருக்காங்க! நமக்கு மட்டும்தான் போச்சு! அநியாயமா ஆயிரம் ரூபாய் போச்சே... ஆயிரம் ரூபாய் போச்சே...

    இப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் திருவிளையாடல் சினிமாவில் ஆயிரம் பொற்காசுக்காகவும், அதை தவறவிட்ட விரக்தியிலும் தருமி புலவர் வேடத்தில் புலம்பும் நாகேஷ் பாணியில் பலரை புலம்ப வைத்துவிட்டது ஐகோர்ட்டு போட்ட உத்தரவு. பொங்கல் பரிசுபொருட்களும், ரூ.1000 பணமும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் கடைகள் மூலம் விநியோகமும் நடந்து வந்தது. இந்த நிலையில் தான் கோர்ட்டு போட்ட தடை ஒவ்வொருவரையும் புலம்ப வைத்துவிட்டது.

    பொதுவாக தீர்ப்பு என்பது பல பிரச்சினைகளில் தீர்வை தருவதாக அமையும். வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு அரசு உதவிகள் கிடைப்பதில் தப்பில்லை! கட்சி பணமாக இருந்தால் கேட்க முடியாது. இது மக்கள் பணம்! செலவழிப்பதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்! என்பதுதான் கோர்ட்டு உத்தரவின் சாராம்சம். நியாயம்தான்! தேர் சரியான பாதையில் செல்ல தடுமாறும்போது சறுக்கு அடை கொடுத்து தேர் சக்கரத்தை சரியான திசையில் திருப்பி விடுவதுபோல் ஆட்சித்தேர் தடுமாறும் போது திருப்பிவிடுவது கோர்ட்டு என்பதை மறுப்பதற்கில்லை.

    ஆனால் சரியான நேரத்தில் சரியாக முட்டுக்கட்டை போட வேண்டும். இல்லாவிட்டால் தேர் திரும்பாது. அதிரத்தான் செய்யும். இப்போதும் அதுதான் நடந்து இருக்கிறது. ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வாங்கிவிட்டனர். வாங்கியவர்கள் சந்தோசப்படுவதும், வாங்காதவர்கள் வயிற்றெரிச்சல் படுவதும் இயற்கைதானே! வாங்காதவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? வறுமை கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு பணம் மட்டும்கொடுக்க வேண்டாம். பரிசு பொருட்கள் கொடுக்கலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏன் அவர்களால் ஒரு கிலோ அரிசியும், அரைகிலோ வெல்லமும் வாங்க முடியாதா? இதைமட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? இலவசங்கள் எதுவும் தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்து. இதை வெளிப்படையாகப் பேசினாலும் அந்த சொக்குபொடியை போட்டுத்தானே அரசியல் கட்சிகள் வாக்காளர்களை மயக்கி வருகின்றன. இது இன்று நேற்றல்ல. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் பழக்கம்தான்.
    வேட்டி&சேலையில் தொடங்கி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கலர்டி.வி. ஆடு, மாடு என்று பல இலவசங்களை கொடுத்து அரசியல் கட்சிகள் மக்களை மகிழ்வித்து உள்ளன. அதே பாணியில்தான் பணமும் ரூ.100&ல் தொடங்கி இப்போது ரூ.1000 ஆக உயர்ந்து இருக்கிறது.

    பல ஆயிரம் கோடி கடனில் இருக்கும்போது இப்படி கூடுதல் கடன் சுமையை ஏற்றுவது சரிதானா? என்று ஒரு குடிமகனாக இருந்து வழக்கை தொடர்ந்தவர் கேட்டிருப்பது சரிதான்! ஆனால் நாட்டில் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. எல்லா திட்டங்களிலும் மானியங்களும், இலவசங்களும் தகுதியானவர்களுக்குத்தான் கிடைக்கிறதா? நாடுமுழுவதும் விவசாய கடன் தள்ளுபடி என்பது ஒரு பேஷனாகி வருகிறது. ஏழை பாழைகள் வாங்குவது அதிகபட்சம் ஒரு லட்சத்துக்கு கீழ்தான் இருக்கும். காரணம் நிலமே அவனுக்கு அவ்வளவுதான் இருக்கும். ஆனால் பல லட்சங்கள் வாங்கியவர்களின் கடனும் தள்ளுபடி ஆகிறது. அதனால்தான் கடன் தள்ளுபடி செய்வதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் அதிருப்தி தெரிவித்தார்.

    ஏதோ ஒரு ஏக்கருக்குள் நிலத்தை வைத்து விவசாயம் செய்யும் விவசாயிக்கும் பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாய தொழில் செய்யும் ஜமீன்தாருக்கும் இலவச மின்சாரம் தான் கொடுக்கப்படுகிறது. காசுகொடுத்து அரிசியை வாங்கி, போட்டிபோட்டு விலையை குறைத்து, கடைசியில் அதை இலவசமாகவே வழங்குவதும் இங்குதான். இவை எல்லாம் வறுமை கோட்டுக்கு கீழ், அதாவது அரிசிகூட வாங்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறதா? வரவுக்கு ஏற்பதான் செலவுகள் இருக்க வேண்டும் என்பது வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பொருந்தும். ஒரு சிறப்பு திட்டத்தை முடக்குவதால் இதை சீர்படுத்த முடியாது. எல்லா துறைகளிலும், எல்லா நிலைகளிலும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

    ஒவ்வொரு துறையையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வரவுக்கு மீறி செலவுகள் இருந்தால் அதை கட்டுப்படுத்த என்ன வழி என்று யோசிக்க வேண்டும். இந்த சம்பளம் பத்தாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்ற கோஷமும் கேட்கிறது. இந்த வருமானத்தை கொண்டு எப்படி குடும்பத்தை ஓட்டுவது? என்று தவிப்பவர்களையும் பார்க்க முடிகிறது. ஆகவறுமை கோட்டின் அளவுகோல் என்ன? இதுவே யாருக்கும் தெரியாதே! முதலில் பொருளாதாரத்தில் நலிந்து கிடப்பவர்கள் பற்றிய தெளிவான விபரம் தேவை.
    ஒரு தீர்ப்பு பல கேள்விகளை கேட்க வைத்திருக்கிறது! இதன் தீர்வு என்ன? #Pongalgift #MadrasHC #TNGovt
    Next Story
    ×