search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை-கும்பகோணத்தில் 2-வது நாளாக தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
    X

    தஞ்சை-கும்பகோணத்தில் 2-வது நாளாக தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

    தஞ்சையில் மற்றும் கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக பேரணி, ரெயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

    அதன்படி நேற்று தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பேரணி, ரெயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தஞ்சை பழைய பஸ்நிலையம் முன்பு குவிந்த ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியில் வர முடியவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதே போல் மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அரசு ஊழியர் வடக்கு வட்ட தலைவர் சரவணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம் புதிய பஸ்நிலையம் முன்பு இன்று தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    தொ.மு.ச. தலைவர் செல்வராஜ் தலைமையில் திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. கண்ணன், ஐ.என்.டி.யூ.சி. செல்வராஜ் மற்றும் தில்லைவனம் கண்ணையன், எச்.எம்.எஸ் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×